Tuesday 24 January 2017

இலையுதிர் ஏகாந்தம்


தனிமை வரம்
தனிமை விடுபடல்
தனிமை துறவு
தனிமை ஓடிக் களைத்தவருக்கு
கொடுக்கும் விருது
தனிமையில்
மரங்களோடு பேசலாம்
மலர்களோடு மலரலாம்
வரவேற்பறையில் தூங்கலாம்
படுக்கை அறையில் உண்ணலாம்
நடு இரவில் பழைய டைரியைத் தேடலாம்
தேர்வு காலம் இல்லை
வேலை நேரமில்லை
தனக்கான நிறம்
தனக்கான வீடு
தனக்கான  வாசனை
தனக்கான இசை
தனிமை உரிமை
முதுமையின் மறதி மன்னிக்கப்படும்
முதுமையின் இயலாமை ஏற்றுக் கொள்ளப்படும்
முதுமையின் நோய் தள்ளிவைக்கப்படும்
தனக்கான விதி முறையும், கோட்பாடும் சரியாகக் கடைபிடிக்கப்படும்
எந்த நிமிடத்திலும் விருந்தாளிகள் வரலாம்
விரும்பினால் மட்டுமே திரும்பிச் செல்லலாம்
பழைய கதைகள் கேட்கப்படும்
பழைய திரைப்படம் பார்க்கப்படும்
அனுபவங்கள் ஆவணமாக்கப்படும்
முதுமை முன்னுதாரணமாகும்
தனிமை ஏகாந்தமாகும்

மரணப் படுக்கையில் விழும் வரை... 

No comments:

Post a Comment