Monday 25 November 2019

காச்சர் கோச்சர் - இறுதி அத்திரம்



சாம, பேத, தான, தண்டம் அனைத்தும் இந்த உலகின் அஸ்திரங்கள் தாம். ஒருவர் எடுக்கும் அஸ்திரம் என்பது அவருடைய நிலைப்பாட்டைப் பொருத்ததாக இருக்கலாம் ஆனால் அதன் கூர்மை அவருடைய வாழ்வாதாரத்தைப்  பொருத்துத்தான் அமைகிறது. காச்சர் கோச்சர் ஆண்களின் பார்வையில் சொல்லப்படும் பெண்களின் கதை. கதையில் வரும் காப்பி ஹவுஸ் ஆதியில் நாம் வேட்டையாடிய அதே காடுதான்.

கதைசொல்லிக்குக் காப்பி ஹவுஸ், அனிதாவின் அப்பாவுக்கு நூலகம், நமக்கு என்ன என்பதை நாம் அறியும் தருணம் கதை அதன் வெற்றியை அறிவித்துக் கொள்கிறது. சுகாசினி இருவேறு பசிகளைப் போக்கி  வெங்கடாசலத்தின் காதலைப் பதிலாக எதிர்பார்க்கிறாள் எல்லாச் சராசரிப் பெண்களைப் போல, கம்பராமாயணத்தில் ராவணனின் இறப்பிற்குப் பிறகு மண்டோதரி புலம்பலில் கம்பன் ஒரு வரியைப் போட்டு இருப்பார் தனிநின்று அழைத்து (அந்தரங்கமான பெயரைச் சொல்லி அழைத்து) மனதைக் கனமாகத் தாக்கி அங்கிருந்துதான் கதை நகரத் தொடங்குகிறது. சித்தப்பாவின்( வெங்கடாசலம்) சதுரங்க விளையாட்டுக் காய்கள் தான் இந்தக் கோச்சர் காச்சர்.  சாதாரண மாக நடக்கும் எளிய வாழ்கைச் சித்திரம் எங்கே கைமீறிப் போகிறது என யோசிக்க விடாமல் ஏதோ ஒருகணத்தில் கண்களை மறைத்துக் கைகளில் ரத்தத்தின் கறையைப் படியச் செய்கிறது.
டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கின் போது மரணத் தண்டனைக்கு எதிராகப் பேசிய மனுஷ்யப்புத்திரன். அந்தக் குற்றவாளிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களின் பின்னணி என்ன? அவர்களும் மகன், தமையன், தம்பி, தந்தை என ஏதோ ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தானே? என்று எழுப்பியக் கேள்விகளும். பதிலாக எளிய மனிதர்களான இவர்கள்
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்என்ற குறளில் வருவது போல ஒன்று சேரும்போது தீயச் செயல்களின் பலமும் அதிகமாகி விடுவதை  இந்தக் கதையும் சொல்கிறது. கோச்சர் காச்சர், காச்சர் கோசர் எனச் சிக்கல்கள் விலகும் நேரம் யாரோ யாருக்காகவோ கரைந்துப் போகிறார்கள்.
புகைப்படத்தில் மட்டுமில்லாமல் வாழ்விலும் ஜன்னல் வழியாகவே பார்க்கும் பெண்ணாக அனித்தா இருக்கிறாள். ஒரு புது மணப் பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா? எறும்பை நசுக்கியதற்காகக் கதறி அழுத அனித்தா, பரிசுப் பொருட்களைத் தேடித் தேடி வாங்கிய அனித்தா, வேலைக்குச் செல்லாத கணவனைக் கண்டிக்கும் அனித்தா. ஜன்னல் வழியாகக் கூலிகள் மூட்டையை இறங்குவதைப் பார்த்த அனித்தா, சுகாசினிக்காகப்  பேசிய அனித்தா, யாரோ ஒரு பெண்ணின் இறப்புச்செய்தி அலமாரியில் கத்தரித்து வைத்திருந்த அனித்தா இப்படி அனித்தாவைப் படிப்படியாகக் காட்டும் எழுத்தாளர் ஒரு பெண்ணின் மன உணர்வையும் அப்படியே காட்டுகிறார்.


கதைசொல்லியாக வரும் நாயகன் கதையைச் சொல்லும்போது எந்த இடத்திலேயும் அவரின் கோட்டைத் தாண்டாமல் கதைச் சொல்லும் விதம் அபாரம், உதாரணமாகக் கவித்தாவும் கதைசொல்லியும் பேசும்போது டீப்  போடவில்லை என்பதற்காகக் கையை உடைத்த கணவனும் பக்கத்து வீட்டில் சாவிக் கொடுக்கவில்லை என்பதற்காகக் மனைவியைக் கொன்றக் கணவனையும் பற்றிக் கவித்தாச் சொல்லும்போது இதற்குக் காரணம் அது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் கதையின் தொடக்கம் வரியிலிருந்து கதையின் உயிர் நாடியை எந்த இடத்திலும் பிசகாமல் சரியான அளவில் சரியான இடத்தில் நிறுத்துவது வரை அபாரமோ அபாரம்.
கதையில் நான்கு இடங்களில் பேசும் வின்சென்ட் யாராக இருக்க முடியும் வேறு யார்? நாம் செய்து முடித்த  எல்லாச் செயல்களுக்கும் விளக்கம் கொடுக்கும் அதே உள்ளுணர்வு தான். அதுதான் குற்ற உணர்விலிருந்து நம்மைக் காப்பாற்றும் பிரம்மாஸ்திரம்.


பழைய வீட்டில் எறும்புகளைக் கொல்லும் அம்மாவை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சித்தப்பாவைக் கேள்விக் கேட்காத அம்மாவையும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி குடும்பத்தை வழிநடத்தும் அம்மாவையும் புரிந்துகொள்ள முடிகிறது.  மாலதியைக் கேள்விக் கேட்காத அம்மாவையும் மைதிலியின் பொருட்டு வெளியே தங்கும் மாலதியைக் கேள்விக் கேட்காத  அம்மாவையும் புரிந்துகொள்ள இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மாமியாருக்கு மருமகள் எறும்பாவது புதிதல்லவே எனவே அதை விட்டுவிடலாம்.
நாம் படிக்கும் எல்லாப் புனைவுகளும் கோச்சர் காச்சரில் இருந்து நம்மை வழிநடத்தும் காச்சர் கோச்சர் தாம். பளபளப்பான ஷூ வோடு சென்று புழுதிபடிந்த ஷூவோடு திரும்பும் அப்பாக்கள் பேச முடியாமல் ஆகும் இடங்களில் வாழ்வுச் சறுக்கி விழுகிறது. கவித்தாக்களும், அனித்தாக்களும் வெறும் அஸ்திரங்கள் அல்ல அவர்கள்தான் நம்பிக்கையின் அறத்தின் அச்சாணிகளும்.