Wednesday 25 January 2017

எம்பி பிடிக்கும் தூரத்தில்

எதற்காகவோ எதை எதையோ கற்றேன்
எல்லாவற்றையும் சேர்த்தேன்.

ஏனோ எல்லாம் மறந்தேன்
எல்லாவற்றையும் இழந்தேன்.

புரிவதற்கு ஏதோ உள்ளபோதும்
அதையும் தாண்டி
நான் மிச்சமிருக்கிறேன்.

காற்றோடும் புழுதியோடும் கலந்துவிட்ட
மூதாதயர்களின்
மூச்சுக் காற்றிலும், காலடித்தடத்திலும்

பாழடைந்த சங்கத்துக் கிணற்றின் அரவத்திலும்

வயல் வெளியாய் வாழ்ந்து வானம் பார்த்து
கிடக்கும் பார்த்தினியா காட்டிலும்

டைல்சுக்கு ஊடே இருக்கும்
குலசாமியின் கண்களிலும்

இன்னும் இன்னும் உள்ளபோதும்....

அதையும் தாண்டி

எம்பி பிடிக்கும் தூரத்தில்

நான் மிச்சமிருக்கிறேன்.

அது மட்டும் போதும்


என் டைரியின் பக்கங்கள் கூடப்
பொய்களாலேயே நிரப்பப் படுகின்றன
ஒருவரை ஒருவர் ஆளுமை செய்ய
நித்தமும் பல நாடகங்களின் அரங்கேற்றம்
பொய்கள் கொட்டிய புழுவும்
உண்மையான குள()வியாய்
வண்ணக் கலவைகளில் வேடமிட்டு
வேடங்களாய் நான்

குயிலுக்கு மறுமொழி கூறத் துணிவேதும் தேவையில்லை
அவர் சிரிப்பார் இவர் பார்ப்பார் எனும் நிலை உதிர்த்து
அப்பாவின் தோள் அமர்ந்து ஊர் சுற்றும் பெருமிதத்திற்கும்
தூண்களின் வரிசை நடுவே வளைந்து ஓடும் குதூகலத்திற்கும்
ஆளில்லா வீதியிலே பாட்டுப்பாடும் மகிழொலிக்கும்
வெள்ளந்தி சிரிப்புக்கும் வினையில்லா பேச்சுக்கும்
உண்மைக்கும் உணர்வுக்கும் ஒரு நாள் உண்டெனில்
அது மட்டும் போதும்.


வானத்தின் இரு கண்கள் வழி



என் கடந்த காலத்தை ஒரு கோட்டை போல் கழட்டி எறிகிறேன்.
எத்தனை முறை உரித்து எறிந்தாலும்
ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுப்போகிறேன்.
அழிக்க முடியாத உரித்தெறிந்த கடந்த கால
பிம்பத்தைக் கண்ணாடி குவளைகளில் அடைத்துக் கண்காணிக்கிறேன்.
ஒவ்வொரு பிம்பத்தையும் பிரத்யேக முறையில் - என்
கைப் பாவைகளாக்கிக் கர்வம் கொள்கிறேன்.
வேலியிடப்பட்ட என் அகந்தையின்
அடையாளங்கள் அவை.
ஏதோவொன்றை மீட்டுருவாக்க எவற்றை எல்லாமோ செய்யும் முயற்சியில்
நிகழ்காலம் நீராய்க் கரைந்து என் கால் நழுவி ஓடுகிறது.

வெட்கம்

வெட்கம்
யாருக்கு வேண்டும் வெட்கம்?
நாய்களுக்கு என்றான் பாரதி

பூனையும் நாயும் உயிர்களில்
சமம் என்பான்
பெண்ணை! - வெட்கம்
நுகர்ச்சி பொருளென்பான்


நளினம் பெண்ணின் அடையாளம்
வெட்கம் பெண்ணின் ஆயுதம்
பல சமையம் வீசியவரையே
கொல்லும் வெட்கம் வெட்கம்கெட்ட
ஆயுதம்

இளைய தமிழ்

இளைய தமிழ்
எங்கும் நிறைந்த தமிழே!
பார்! எங்கும் பார்!
உனக்கு எத்தனை விழிகள்!
எத்தனை செவிகள்!
நீ பரந்து விரிந்து விட்டாய்
அண்டம் கொண்டு விட்டாய்
அணுவில் புகுந்து விட்டாய்

புலம் பெயர்ந்தவன்
தாய் மடி தேடினானோ இல்லையோ
இளைய தமிழே!
கட்டாயம் உன்
தமிழ் மடி தேடுவான்
நான் உன் இதழ்களைத் தேடினேன்
முத்தமிட இல்லை
வாசிக்க! சுவாசிக்க!

இளைய தமிழே!
இணையத்தில் உனக்கு இரண்டாமிடமாம்
! உன் அழகுக்குக் காரணம்
புலம் பெயர்ந்தவன்
பின்னிய வலையோ? - வாழ்க! தமிழன்
கணினியில் குடிபுகுந்தாய் - நித்தம்
என் கண்ணிலே கடை விரித்தாய்
உண்ணும் உணவானாய்!
வாழும் கலையானாய்!
காணும் கனவானய்!

இளைய தமிழே!
அப்படி என்ன உனக்கு
அவனோடு சினேகம்?
என் குழந்தையின் நாவில்
இப்படி ஆடுகிறாய்!
விளையாடுகிறாய்!
நின் ஆங்கிலத் தோழனோடு
சரி, இருந்துவிட்டுப் போகட்டும்
அவனும் சுகமான சுமைதான்!
இளைய தமிழே!
நித்தம் காலையில்
கண் விழிக்கும் முன்
செவி விழிப்பேன்
உன் ஒலி கேட்க!
ஒலியில் கேட்க!


இளைய தமிழே!
என் இதயம் கொண்டவளே
ஐம்புலன்களிலும் புகுந்துவிட்டாய்
புலம் பெயர்ந்து புலம் பெயர்ந்து
புவியாட்சி செய்கின்றாய்
உன் ஆசி வேண்டுகிறேன் 

கற்றுக்கொடுப்போம்


பட்டுச்சிறகு விரித்துப் பறந்த வண்ணத்துப்பூச்சி பிடித்து

பிஞ்சுப்போன அதன் சிறகுக்காய் அழுது

பால் வடியும் பிஞ்சு மாங்காய் பறித்து

வரப்போரம் நடைபழகிச் சறுக்கி விழுந்து

பூவரசம் பூப்பறித்து கூட்டுவைத்து

சிறுகற்களில் பொரியல் செய்து

கள்ளன் போலிஸ் விளையாடி

புழுதியில் கட்டிப்புரண்டதெல்லாம்

நம் பிள்ளைகளுக்கு இல்லை

இன்னும் நாற்பது ஆண்டில்

பூகோளம் நீர்க்கோளமாம்

ஆதங்கப்பட்டேன் தோழியிடம்

அவள் சொன்னாள்

கவலைப்படாதே எல்லோருக்கும் நீச்சல்
கற்றுக்கொடுப்போம் என்று.

அது மட்டும் வேண்டாம்


புரையோடிய பொய்களும்
செல்லரிக்கும் சுயநலமும்
பல்லிளிக்கும் பாசாங்கும்
குடிகெடுக்கும் பணவெறியும்

எரிபரக்கும் ஆணவமும்
திறந்தவெளிச் சிறையில் மனிதனை
அடைக்கும் காட்டுமிராண்டித்தனமும்
பிறர் உயிர் பறிக்கும் தினவிய திமிரும்

இரத்தமில்லா உயிர்க்கொலையும்
எமக்கென்ன எனும் மெத்தனமும்
இத்தனையும் உள்ளடக்கிப் பரிணாம வளர்ச்சி பெற்று
சிங்கப்பல் இரண்டு முளைக்காத குறையாய்

கொத்து கொத்தாய் மனிதர்களைக் கொன்று குவித்து
வித விதமாய்க் கிருமிகளை உலவ விட்டு
எச்சில் பருக்கைகள் எனச் சிதறடிக்கப் பட்ட
மனிதநேயத்தைக் கொன்று விட- இன்னும்
ஒரு காலம் வரும் என்றால்

அது மட்டும் வேண்டாம் 

தாஜ்மகால்


காதல் என்பார்கள் கட்டிப்பிடிப்பார்கள்
கட்செய்தால் காட்டுவதா தாஜ்மகால்?


இரண்டாம் முறையாக மூன்றாம் தாரமென
முத்துகளைப் புறந்தள்ளியே உதிர்ந்துபோன
சிப்பியின் நினைவாலயமா தாஜ்மகால்?


வரலாற்று கருப்புப் பக்கங்களை வெள்ளைப்
பக்கங்களாக்கிய கலைச்சின்னமா தாஜ்மகால்?


சிதைக்கப்பட்ட கைகளின் வழியே வடிக்கப்பட்ட
உதிரத்தின் காவியமா தாஜ்மகால்?


விசுவாசம், விசுவாசம் என்று வளைக்கப்பட்ட
உழைப்பாளிகளின் மணிமகுடமா தாஜ்மகால்?


அதிகார வர்கத்தின் புகழுக்கு இட்ட
ராஜமுத்திரையா தாஜ்மகால்?


சொல்லப்படாத வரலாற்றையும் எழுதப்படாத
காப்பியங்களையும் கால வெள்ளத்தைக்

கடந்து யமுனையோடு காது
கொடுத்துக் கேட்டுப்பாருங்கள்

மனிதன் கடந்து வந்த, கடக்கவிருக்கும்
வாழ்க்கை பாதையின் மைல் கல்லே

தாஜ்மகால்.

நிராயுதபாணி


என் காயங்களுக்கு காரணமான
அவன் அம்புகளை நான் சேகரிக்கிறேன்.

வீட்டு சுவரில் படங்களாகவும்,
திரைச்சீலைகளை வசிகரபடுத்தும் தையல்களாகவும்,
என் சேலைக் கரையின் தொங்கல்களாகவும்,
உதட்டு சாயமாகவும்
உள்ளாடை சித்திரங்களாகவும்
கவிதையாய் பாதுகாக்கிறேன்

வியுகமாய் சுழலும் அவற்றின்
ஆயுள் எண்ணி வருந்துகிறேன்.
மயிலிறகுகள் நிறைந்திருக்கும் - என்
அம்பாராத்தூணியில் எப்போதும்
அம்புகளுக்கு இடமில்லை.

சொற்களை போலவே அம்புகளையும்
நான் இழக்க விரும்பவில்லை
நிராயுதபாணியாய் அம்புகளை
எதிர் கொள்ள ஒருபோதும் வெட்கமில்லை!

நான்


நீண்ட நெடிலுக்குப் பின்னால்
தனித்து விட்ட ஒற்றாய்
காற்றில் படபடக்கும் இதயப் பக்கங்களில்
முகவரி தேடும் நான்.

கூடு விட்டு,கூடு பாயாமல்,
பச்சோந்தியாகவும் மாறாமல்,
மாறி மாறி உருவம் தேடும்,
சொந்த முகத்தைத் தொலைத்தவள்.

துருப்பிடித்த இதயச் செல்களை
உரித்து,உரித்து தேடிய
ஒற்றை உயிரணு

ஒளிந்து கொண்ட நேற்று வந்தவர்கள்
விடாது விரட்டும் நாளை வருபவர்கள்
ஓடியோடி களைத்த கண்ணாம்பூச்சி விளையாட்டில்
உப்புக்குச்சப்பாணி.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும்
எனக்குப் பின்னால் விரிகிறது, விசித்திர உலகம்-அதில்
நீர்பட்டு கலைந்த கண்ணாடி ஓவியமாய்

நடந்ததெல்லாம் நல்லதுக்காக
தொலைந்து போனது - நான்
மட்டுதான்.

நான், புரியாத கேள்வியும் இல்லை;

புரிகின்ற விடையும் இல்லை.

அவனே என் தோழன்

என் படுக்கை வரை பயணிக்கும்
இரவல் தோழன் இவன்
அவன் சுகந்தத்தைச் சுவாசித்தே
பரிமளிப்பவள் நான்

என் தலையணை மட்டும் அறிந்த
ரகசியங்கள் அறிகிறவன்
சதா என் மனவெளியில்
உலவிக்கொண்டு இருப்பவன்

என் விரல்களை முத்தமிட்ட
படியே நடை பயில்விப்பவன்
இமைகள் படபடக்கும் அந்த
நொடிப் பொழுதும் என்
கருவிழிகளோடு இயைந்தே
பயணிப்பவன்

என் குறைகளை அறிந்தவனாகவும்
கலக்கங்களைத் தெளிவிப்பவனாகவும்
என் சுயத்தைக் காத்து
இடித்துரைப்பவனாகவும்

என் மெளனத்தை உடைப்பவனாகவும்
பேசியே என்னை மெளனத்தில் ஆழ்த்துபவனாகவும்
ஊடலையும் உவகையையும் மாறித் மாறி
தருபவனாக இருக்கிறான்

நானும் அவனும் வேறுவேறு
பாலினமாய் இருந்தபோதும்
வெறுப்பை உமிழவோ
ஆதிக்கம் செலுத்தவோ
மட்டம் தட்டவோ இவன்
முயல்வதில்லை

எந்த முன்னுரிமையும் எடுக்காமல்
எனக்கான வெளிகளை அப்படியே
விடுகிறான்

என் மடிமீதும் மார்மீதும் உறங்கும்
கோடுதாண்டா அஃறிணை உயிர்
இவன்

மூன்றே வாரம் என்னுடன் பயணிக்கும்
பொது நூலகத்து நூல் அவன்

ஆன்ம விசனம்


உனக்கான என் சொற்களை மலை
எதிரொலித்திருக்கிறது
என் காத்திருப்பின் காலங்களை
மலை உள்வாங்கியிருக்கிறது
பெயர் சொல்லா நம் உறவை
இமைகாமல் பார்த்திருக்கிறது
மலையை விழுங்க முடியாமல்
நெடும் தொலைவு ஓடித்திரும்பினேன்
சின்ன கல்லாக கண்புகுந்தது...

இந்திர மலை


குஞ்சு மீன் 
தன் சின்ன சிறையில்
மலையை உண்டு  உயிர்வளர்த்து.
எவ்விக் குதித்து மலையை
முத்தமிட்டு முத்தமிட்டு
காற்றின் மென்திரையை கிழித்தது
நீரில் வீழ்தபின்னும்

மலையை கண்களில் வளத்த மீன்
சிறுகற்கள் கொண்டு
சிறுக சிறுக மலை வளர்த்து 
கனவு கொண்டு நீலம் சேர்த்து
காமம் சேர்த்து காடு வளர்த்து
வேங்கை முகர்ந்து மோச்சம் பெற்றது 
அருந்ததியாய்.

ஒரே நேர் கோட்டில் அல்ல


அவனுக்குள்
கண்மூடிக்கிடக்கும் அந்த
மிருகத்தை ரகசியமாய்
நான் நேசிக்கிறேன்.
ரத்த ருசி அறியாத
அந்த மிருகத்தை
என்னையும் அறியாமல்
நான் ஆட்டிவைக்கிறேன்.

பொதுமை என்ற பெயரில்
அவனுக்கு வீசப்படும் சாமரங்களை
பிய்த்து எறிவதிலும்,
அவன் நேசிக்கும்
கண்ணாடிகளை உடைத்து
எறிவதிலும் விருப்பமில்லை.

எனக்குள்ளும்
மிருகம் இருப்பதாகவே
அவன் நம்புகிறான்.
எனக்காக
வீசப்படும் சாமரங்களை
அவன் கண்டும் காணாதவனாய்
இருக்கிறான்.

இப்படித்தான்
நாங்கள் ஒருவரை ஒருவர்
அப்படியே ஏற்றுக்கொண்டோம்
எங்கள் சாம்ராஜ்ஜியத்துக்கு
உட்பட்ட எல்லைக் கோட்டைத்
தாண்டி அந்நியர் நுழையாத படி
இரவு பகலாகத் தனித்தனியாக
காவல்காத்துத் திரிகிறோம்

அவரவர்களுக்கான அந்தரங்கங்களை
மெல்லிய திரைப்போட்டு மூடியே காக்கிறோம்
திரை ஒருவரை ஒருவர்
வியந்துகொள்ளவும் அங்கீகரிக்கவும்
முயல்கிறது.
அந்தத் திரை நிழலில்
மிருகம் கால் பரப்பி
ஏகாந்தமாய் உறங்குகிறது.

அதையும் தாண்டி
ஒரே நேர்கோட்டில் சந்திக்காத
நாங்கள் எங்களைச் சமமானவர்களாகவே

பிரகடனப்படுத்துகிறோம்.